திங்கள், 21 டிசம்பர், 2015

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. மேலும் பெரியாழ்வாரும்  ஆண்டாளும் அவதரித்த திருத்தலம். வில்லி என்ற வேடனின் காட்டை அழித்து கோவில் எழுப்பியதால் இந்த ஊருக்கு வில்லிபுத்தூர் என பெயர் அமைந்தது.

இங்கு மூலவர் பெயர் வடபத்ராசாயி. மூலவருக்கு இன்னொரு பெயர் ரெங்கமன்னார். மூலவர் சுயம்பு மூர்த்தி. ஸ்ரீதேவி பூதேவி அடிவருட பெருமாள் மூலஸ்தானதில் சயன கோலத்தில் காட்சி தருகிறார். இங்குள்ள சக்கரத்தாழ்வார் சன்னதி மிகவும் பழமையானது.

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த விஷ்ணு சித்தர் எனபவர் மதுரையில் நடந்த போட்டியில் பொற்கிழி பரிசு வெல்கிறார். பெருமாள் கருட வாகனத்தில் தோன்றி இந்த பரிசை அவருக்கு கிடைக்க செய்ததாக சொல்லப்படுகிறது. அப்பொழுது கண் முன்னே தோன்றிய பெருமாளின் அழகை பார்த்து பக்தர்கள் கண் பட்டு விடுமோ என அஞ்சி விஷ்ணு சித்தர் பெருமாள் பல்லாண்டு வாழ்வேண்டும் என வாழ்த்தி பாடுகிறார். இந்த பக்தியை மெச்சி திருமால் அவருக்கு நீரே பக்தியில் பெரியவர் என சொல்கிறார் . அன்று முதல் விஷ்ணு சித்தர் பெரியாழ்வார் என அறியபட்டார் என்பது கதை. இந்த திருபல்லாண்டு பாட்டு தான் உலகம் முழுவதும் உள்ள பெருமாள் கோவிலில் இன்றும் தினமும் பாடபட்டு வருகிறது. உலகில் எந்த மூலையிலுள்ள பெருமாள் கோவிலுக்கு சென்றாலும் தமிழில் பல்லாண்டு பாடல்களை கேட்கலாம். எல்லா பெருமாள் கோவில்களிலும் நடை திறப்பின் போது திருபல்லாண்டும் திருபாவையும் பாடுவதை கேட்கலாம். இவை இரண்டும் இயற்றிய பெரியாழ்வாரும் ஆண்டாளும் பிறந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர்.

மகாலக்ஷ்மியே விஷ்ணு சித்தரின் வளர்ப்பு மகளாக ஆண்டாளாக அவதரித்ததாக  கருதப்படுக்கிறது. பெருமாள் மீது பக்தி கொண்ட ஆண்டாள் அவரையே மணக்க விரும்புகிறார். பெருமாளை மணக்க விரும்பிய ஆண்டாள் மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருக்கிறாள். பங்குனி உத்திரத்தில் ரெங்கமன்னார் ஆண்டாளுக்கு அருள் செய்து மணம் செய்து கொள்கிறார்.

உற்சவ ஆண்டாள் அணிந்த மாலை சித்ராபவுர்ணமியன்று மதுரை கள்ளழகருக்கும் திருப்பதி பிரம்மோத்சவத்தின் 5 ஆம் நாளன்று வேங்கடபதிக்கும் கொண்டு சென்று அணிவிக்கப்படுகிறது. அந்த மாலையுடன் ஆண்டாள் பட்டுபுடவையும் கிளியும் கொண்டு செல்லபடுகிறது. பெரியாழ்வார் வளர்த்த நந்தவனத்திலிருந்து கிடைக்கும் பூக்களை கொண்டே ஆண்டாளுக்கு மாலை கட்டப்படுகிறது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது ஆண்டாள் கொடுத்தனுப்பும் புடவையை அணிந்து கொண்டே ஆற்றில் இறங்குகிறார்.

ஆண்டாளுக்கு இன்னொரு பெயர் சூடி கொடுத்த சுடர் மங்கை. நந்தவந்த்தில் பூத்த மலர்களை கொண்டு தினமும் மாலைகள் செய்த பின்பு அதை தான் சூடி விட்டு பின்பு ஆழ்வாரிடம் கொடுத்து பெருமாளுக்கு சார்த்த கொடுத்து வந்தாள். இது தெரியாமல் ஆழ்வாரும் அந்த மாலையை தினமும் பெருமாளுக்கு அணிவித்து வந்தார் .ஒரு நாள் மாலையில் கோதையின் (ஆண்டாளின் இயற்பெயர்) முடி இருப்பதை பார்த்த ஆழ்வார் அதை விடுத்து வேறு மாலை கொண்டு போகிறார் . பெருமாள் உடனே கோதை சூடிய மாலையே வேண்டுமென கேட்கிறார் . இதை கேட்டு ஆழ்வார் கோதையை இறைவனுக்கு மணமுடிக்க காத்திருக்கிறார். ரெங்கமன்னார் ஸ்ரீரெங்கத்தில் வந்து சந்திக்க சொல்ல அங்கு சென்று ஆண்டாள் இறைவனுடன் ஐக்கியமாகிறாள். பெரியாழ்வாரின் வேண்டுதலுக்கு இணங்கி வில்லிபுத்தூரிலும் இறைவன் எழுந்தருளினார் என்பது தலவரலாறு.

61 வகை மூலிகைகளில் தைலம் செய்து அதை, நல்லெண்ணெய், பசும்பால், நெல்லிக்காய்,தாழம்பூ, இளநீர் முதலான பல பொருட்கள் சேர்த்து ஏழுபடி எண்ணெயில் 40 நாட்கள் காய்ச்சி அந்த எண்ணெயையை மார்கழி மாதம் ஆண்டாள் எண்ணெய் காப்புக்கு பயன்படுத்துவார்கள். மார்கழி மாதம் 8 நாட்களுக்கு இதை ஆண்டாளுக்கு சார்த்துவார்கள். பின்பு அது பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய்க்கு சகல நோய்களையும் தீர்க்கும் சக்தியுள்ளதாக நம்பபடுகிறது.


தமிழக அரசின் முத்திரை சின்னமாக இருப்பது ஆண்டாள் கோவில் கோபுரம் தான். ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் தேர் தமிழகத்திலுள்ள கோவில் தேர்களிலயே மிகவும் பிரசித்தமான ஒன்று. மிகவும் பழமைவாய்ந்த இந்த கோவில் தேரில் அருமையான வேலைப்பாடுகள் நிறைந்த சிற்பங்கள் பல உள்ளது. 

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

தெரியாத பல புது தகவல்கள்.அருமை