செவ்வாய், 22 ஏப்ரல், 2014

இடகுஞ்சி கணேசர் கோவில்

Idagunji Ganesh 
கோகர்ணத்தில் இருந்து சுமார்  65 கி.மீ தொலைவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் உள்ளது தான் இடகுஞ்சி விநாயகர் ஆலயம் . சாராவதி நதி அரபி கடலில் கலக்கும் இடத்திற்கு அருகில் மேற்கு கடற்கரை ஓரமாக உள்ளது தான் இந்த பிரசித்தமான விநாயகர் ஆலயம் . சுமார் 1500 ஆண்டுகள் பழமையானது இந்த கோவில் . கர்நாடக மற்றும் கேரளா மாநிலத்தை ஒட்டியுள்ள மேற்கு கடற்கரை ஓரத்தில் 6 விநாயகர் கோவில்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை . கோகர்ணம் ,இடகுஞ்சி ,குந்தாபுரா ,ஆநேகுட்டே ,மங்களூரு ,காசர்கோடு ஆகிய ஊர்களில் இவை உள்ளது . இதில் காசர்கோடு மட்டும் கேரளா மாநிலத்தில் உள்ளது . கோகர்ண விநாயகர் பற்றி ஏற்கனவே முந்தய பதிவில் குறிப்பிட்டுள்ளேன் . சில ஆண்டுகளுக்கு முன்பு கொல்லூர் செல்லும் வழியில் ஆநேகுட்டே விநாயகர் தரிசனம் செய்து விட்டு அதை பற்றியும் ஒரு தனி பதிவு முன்பு எழுதியுள்ளேன் .

கோகர்ணத்தில் இருக்கும் விநாயகர் போலவே இடகுஞ்சி விநாயகரும் நின்ற கோலத்தில் தான் பகதர்களுக்கு காட்சி அளிக்கிறார். ஏறத்தாழ கோகர்ண சித்தி விநாயகர் போலவே இந்த மூர்த்தியும் உள்ளது . இந்த கோவில் கட்டிடகலை சற்று வித்தியாசமாக இருக்கிறது .நம்ம ஊர் கோவில்கள் போல கோபுரங்கள் இல்லை . ஒரு இரண்டு மாடி இல்லம் போல காட்சி அளிக்கிறது . கோவில் முன் இருக்கும்  கொடி கம்பம் தான் அதை ஒரு கோவில் என்று அடையாளம் காட்டுகிறது .

Idagunji temple 


நின்ற கோலத்தில் இருக்கும் விநாயகர் வலது கையில் ஒரு தாமரை மொட்டும் இடது கையில் மோதகமும் இருக்கிறது .இன்னொரு சிறப்பு இந்த ஆலயத்தில் விநாயகரின் மூஷிக வாகனம் இல்லை . இந்த கோவிலில் திருமணத்திற்கு முன்பு திருவுள சீட்டு இறைவன் முன் போட்டு அனுமதி பெறுகிறார்கள் .சீட்டு இறைவனின் வலது கால் அருகில் விழுந்தால் கணேசர் திருமணத்திற்கு அனுமதி அளித்ததாகவும் இடது கால் அருகில் விழுந்தால் அனுமதி இல்லை என்றும் பக்தர்கள் பொருள்  கொள்கிறார்கள் .

ஸ்தல புராணம் படி துவாபர யுகம் முடிந்து கலி யுகம் தொடங்கும் முன் முனிவர்கள் கலியுகத்தின் பிரச்சனைகளை எதிர்கொள்ள கிருஷ்ணனை வேண்டி  தவம் இருக்கிறார்கள் .அப்பொழுது இந்த தவம் மேற்கொள்வதில் அவர்களுக்கு பல இடைஞ்சல்கள் ஏற்படுகிறது . அப்பொழுது அவர்கள நாரதரை நாடியபொழுது நாரதர் இடர்கள் நீங்க கணேசரை வேண்டி தவம் இருக்க சொல்கிறார். நாரதரின் ஆலோசனை படி தான் சாராவதி நதி கரையில் இந்த இடத்தை தேர்வு செய்து தவம் இருக்கிறார்கள் . மேலும் நாரதர் பார்வதியிடம் கணேசரை இங்கு அனுப்பி அவர்களது இடர்களை நீக்கும் படி வேண்டுகிறார்.அவர்களது பக்தியில் மகிழ்ந்த விநாயகர் அங்கு பிரதியக்ஷ்மாகி அவர்களது வேண்டுதலை நிறைவேற்றுகிறார் .அச்சமயம் பூஜைக்கு  தேவையான நீர் கிடைப்பதற்கு விநாயகர் அங்கு ஒருஅங்கு ஒரு ஏரியை அமைத்து கொடுக்கிறார் . அந்த ஏரி இருந்த இடத்தில்  பின்பு பக்தர்கள்   நான்காம் நூற்றாண்டில் இந்த  கோவிலை எழுப்பினார்கள் என்று சொல்லபடுகிறது .வெட்டிவேர் கணேசர் பொம்மைகள் இங்கு மிகவும் பிரசித்தம் .

கருத்துகள் இல்லை: