திங்கள், 21 ஏப்ரல், 2014

திருகோகர்ணம் - மகாபலேஸ்வரர் ,பத்ரகாளி ,சித்தி கணபதி கோவில்கள்

Mahabaleswarar
கர்நாடக மாநிலத்தில் உள்ள கார்வார்  என்ற ஊரில் இருந்து சுமார் 60 கி.மீ.தொலைவில் உள்ளது கோகர்ணம் என்ற ஊர். பெங்களூரில் இருந்து ரயில் மூலம் கோகர்ண ரோடு என்ற ஸ்டேஷனில் இறங்கி அங்கிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில்  உள்ள  கோகர்ணம் என்ற ஊருக்கு செல்லலாம்.இது ஒரு கடற்கரை கிராமம் . சிவன் கோவில் கடற்கரை ஓரம் உள்ளது . இது தவிர இந்த ஊரில்  மேலும் 4 கடற்கரைகள்  உள்ளது . இங்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் தென்படுகிறார்கள் .இதற்க்கு மற்றொரு காரணம் இந்த ஊர் கோவாவிற்கு மிக அருகில் இருப்பதும் தான் .

இங்குள்ள   மகாபலேஸ்வரர்  ஆலயம் ஒரு பாடல் பெற்ற ஸ்தலம் . துளு நாட்டில் உள்ள ஒரே பாடல் பெற்ற ஸ்தலம் இது தான் .அப்பரும் சம்பந்தரும் இந்த சிவ ஸ்தலம் குறித்து ஒரு பதிகம் பாடியுள்ளனர்.இங்குள்ள சிவபெருமானின் காது பசுவின் காது போல குழைந்து காணபடுவதினால் இந்த ஊருக்கு கோகர்ணம் என்று பெயர் வந்தது .கோ -என்றால் பசு ,கர்ணம் என்றால் காது .கோகர்ணம் சிவ ஆலயம் காசி ,ராமேஸ்வரம் போன்ற ஆலயங்களுக்கு நிகரானது என்று பக்தர்கள் நம்புகிறார்கள் ,இங்கு சிவராத்திரி உற்சவம் மிகவும் பிரசித்தம் .

இங்குள்ள மூலஸ்தானம் மிகவும் சிறியது ,சாளகிரக பீடத்தினுள் மூலஸ்தானம் உள்ளடங்கி இருப்பதை காணலாம் .வெளிப்புறம் சிவ லிங்கம் தெரிவதில்லை . அங்கு அம்ரந்திருக்கும் குருக்கள் பக்தர்களை கையை உள்புறம் துழாவி பார்க்க அனுமதிக்கிறார். மிக சிறு அளவில் உள்ள சிவ லிங்கத்தை தொட்டு உணரலாம் .பசுவின் காது போல மென்மையாக இருப்பதை உணரலாம் .அந்த ஊர் வழக்கப்படி பக்தார்கள் திருமேனியை தொட்டு நீராடி மலர் சூடி வழிபடலாம் . அம்மனக்கு தனி சன்னதி உள்ளது. அம்மனின் திருநாமம் தாமரை கௌரி .
Siddhi vinayakar 

ஸ்தல புராணம் படி ராவணன் கைலாசம் சென்று இலங்கை அழியாமலிருக்க சிவ பெருமானை ஆத்மலிங்கம் வேண்டி தவம் இருக்கிறார். அப்பொழுது சிவ பெருமான் சிவ லிங்கத்தை அளித்து இலங்கையில் பிரதிஷ்டை செய்து வணங்கினால் இலங்கை அழியாது என்று அருளுகிறார். ஆனால் இந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்யும் வரை எங்கும் வைக்க கூடாது என்றும் சொல்கிறார்.நாரதர் மூலம் இதனை அறிந்த இந்திரன் பிராண லிங்கத்தை இராவணன் பிரதிஷ்டை செய்துவிட்டால் இராவணன் அழியமாட்டான் ,தேவர்கள் துயர் நீங்காது என எண்ணித் தேவர்கள் புடைசூழ கயிலைமலை சென்று விநாயகரை வேண்டினான். இந்திரனின் வேண்டுகோளை ஏற்ற விநாயகர் இராவணன் கோகர்ணம்  அடையும் வேளையில் , ஒரு சிறுவன் போல அவன்முன் தோன்றி நின்றார். இராவணன் அந்தச் சிறுவனிடம்   சிவலிங்கத்தை  கையில் கொடுத்துச் ராவணன் சிறுநீர் கழித்து வரும் வரை  அதனைக் கையில் வைத்துக்கொண்டு நிற்குமாறு வேண்டினான். சிறுவனாக வந்த விநாயகர், இராவணனை நோக்கி என்னால் சுமைபொறுக்க இயலாத நேரத்தில் மூன்றுமுறை உன்னை அழைப்பேன் அதற்குள் வராவிட்டால் நிலத்தில் வைத்துவிடுவேன் என அருளினார். இராவணனும் இசைந்து சென்றான். நெடுநேரம் ஆகியும் அவன் வராதரால் மூன்று முறை, அழைத்து சிவலிங்கத்தைப் பூமியில் வைத்துவிட்டார். இராவணன் வந்து சிவலிங்கத்தை இருபது கரங்களாலும் எடுக்க முயன்றான். பெருமான் பசுவின் காதுபோலக் குழைந்து காட்டினார். இராவணன், கடைசி வரை ராவணனால் சிவ லிங்கத்தை எடுக்க முடியவில்லை .சிவ பெருமான் மகாபலம் உடையவர் என கூறினார் . அதனாலேயே இங்கு உள்ள சிவ பெருமானுக்கு மகாபலேச்வர் என்று பெயர் வந்தது .

அந்த சிறுவன் செய்த தவறுக்காக மூன்றுமுறை அவனது தலையில் இராவணன்  குட்டினான். சிறுவனாக வந்த விநாயகர் தம் உண்மை வடிவை அவனுக்குக் காட்டிப் பந்துபோல அவனைத் தூக்கி எறிந்து  விளையாடினார். இராவணன் பிழை பொறுக்க வேண்டினான். விநாயகர், உன் தலையில் இவ்வாறே மூன்றுமுறை குட்டிக்கொள் என்று கூறினார். இராவணன் தான் செய்த பிழைக்கு வருந்திக்  தலையில் குட்டிக் கொண்டு அவரை வழிபட்டு  அருள் பெற்றான். விநாயகர் சினம் தணிந்து தலையில் குட்டிக்கொண்டு வழிபடுவோருக்கு வேண்டும் வரங்கள் தருவதாகக் கூறி இராவணனின் பிழைகளைப் பொறுத்து அவனுக்கு நல்வரங்கள் அருளினார் . இந்த சித்தி விநாயகர் ஆலயம் சிவன் கோவிலுக்கு செல்லும் பாதையில் சுமார் 1/2 கி.மீ முன்பு உள்ளது . இந்த விநாயகர் நின்ற கோலத்தில் உள்ளார்.
Badrakaali amman

இங்குள்ள பத்ரகாளி கோவில் ஸ்தலபுரானமும் ராவணனுடன் தொடர்புடையது தான் .இலங்கை அழியாமல் காக்க சிவ பெருமானிடம் ராவணன் வரம் கேட்ட பொழுது உமையவள் போல தனக்கும் ஒரு அழகான் மனைவி வேண்டும் என்று இன்னொரு வரமும் கேட்கிறான் .அதற்க்கு இறைவன் தன மனைவி போல உலகில் வேறு அழகிகள் கிடையாது என்பதால் உமயவளையே ராவணனுடன் செல்ல பணிக்கிறார். சிவ பெருமான் பின்பு விஷ்ணுவின் உதவியை நாடுகிறார்.விஷ்ணு வயதான அந்தணன் வேடத்தில் வந்து ராவணனை ஏமாற்றி உமையவளை கைவிட செய்கிறார். பின்பு உமையவள் அங்கே தங்கி விடுகிறார். பத்ரகாளி கோவிலில் இருக்கும் காளியம்மன் ராவணனால் கை விடப்பட்ட உமையவள் தான்.காளி கோவில் தனியாக உள்ளது .இது சிவன் கோவிலில் போகும் பாதையில் சுமார் 2 கி. மீ. முன்பு உள்ளது .

கருத்துகள் இல்லை: